"திமுகவுக்கும் என் டி ஏவுக்கும் தான் போட்டி...''
"அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி...''
"தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி…'' இப்படியாக தொலைக்காட்சியைத் திறந்தால் அரசியல் தலைவர்களின் முழக்கங்கள் சூடாக கேட்டுக்கொண்டிருக்கின்றன. 2021-இல் அமைத்த கூட்டணியை அப்படியே வைத்துக்கொண்டு கூடுதலாக தேமுதிகவையும் சேர்த்துக்கொண்டு களத்தில் குதித்தது திமுக. அதிமுக ‘தலைமையில்’ பாஜக உருவாக்கிய கூட்டணியில் அமமுக , பாமக சேர தன் முழுபலத்துடன் இருக்கிறார் எடப்பாடியார். இடையில் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களான சசிகலாவும் ராமதாசும் கூட்டணி சேர்ந்து 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பதற்கெனவே நிற்கிறார்கள். நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் புதிய வரவான தவெக இளம் கட்சி. அதன் தலைவர் விஜய்க்குக் கூடும் கூட்டத்தை சமாளிக்கமுடியாமல் அவர் பல இடங்களுக்கு பிரச்சாரம் போவதையே தவிர்க்கும் நிலை!
இந்நிலையில் தமிழக தேர்தல் களம் பற்றி அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ் மணியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். வெளிப்படையாகவும் அதிரடியாகவும் பேசக்கூடிய மணி, இப்பேட்டியிலும் பல போக்குகளை உடைத்துப் பேசுகிறார்.
எண்ணிக்கையில் பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக கூட்டணிதானே களமிறங்கியிருக்கிறது. ஆரம்பகட்ட தேர்தல் கணிப்புகளும் அந்த கூட்டணிக்குத் தானே வெற்றி வாய்ப்பிருப்பதாக சொல்லி உள்ளன.. நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கூட்டணியால் திமுகவுக்கு பலம்; திமுகவால் கூட்டணிக்குப் பலம்… இதுதான் சமீபகாலம் வரை இருந்த நிலவரம். ஆனால் கூட்டணியில் இடப்பகிர்வுக்கு ஏற்பட்ட இழுபறியைத் தொடர்ந்து நிலைமையில் பலவீனம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் ஆதரவு முழுமையாக இருக்குமா என்பது சந்தேகம். அதே நிலைதான் விசிக, இடதுசாரிகளின் நிலையும். சீட்டுப்பங்கீட்டில் இருந்த இழுபறி இன்னும் தொண்டர்களிடம் பிரதிபலிக்கிறது. தேமுதிகவுக்கு பத்து இடங்கள் கொடுத்ததில் இவர்களுக்கு இன்னும் கோபம் தீரவில்லை. காங்கிரஸின் தவெக சாய்வு இன்னும் சரியாகவில்லை. தவெக தலைவர் விஜய், கேரள வாக்குப் பதிவுக்கு ஒரு நாள் முன்பாக திருநெல்வேலியில் தமிழக காங்கிரஸ் நம்முடன் இல்லை. ஆனால் தேசிய அளவிலான காங்கிரஸ் நம்முடன் இருக்கிறது என்று சொன்னதில் அர்த்தமில்லாமல் இல்லை. அது கேரளத்தில் தனக்கு ஆதரவான வாக்குகளை காங்கிரஸ் பக்கம் இழுக்க என்றுதான் புரிந்துகொள்ளப்படுகிறது. விசிகவின் வாக்குவங்கி தவெக பக்கம் கொஞ்சம் போயிருக்கிறது. மீதமிருக்கும் சனாதன எதிர்ப்பு வாக்குகளை தம் பக்கம் தக்க வைக்கும் எந்த முயற்சியிலும் திமுக அக்கறை காட்டவில்லை.
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது மதுராந்தகம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களிலும் நான்காவதாக ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலிலும் கூட்டம் போட்டார். ஒரு இடத்திலும் அதிமுக பெயரைச் சொல்லவில்லை. திமுகவும் தங்களுக்கும் என்டிஏவுக்கும்தான் போட்டி என்கிறார்கள். இவர்களுக்குள் இந்த ஒற்றுமை இருக்கிறது, அதாவது அதிமுகவை ஒரு போட்டியாளராக அங்கீகரிக்காமல் இருப்பது என்ற ஒற்றுமை. ஆனால் மக்களுக்கு அதிமுக கூட்டணி என்றுதான் தெரிகிறது. அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் இது எதிரொலிக்கும். பாஜக வேட்பாளர்களை அவர்கள் எந்த அளவுக்கு ஆதரிப்பார்கள் என்பது கேள்விக்குறி.
அதிமுக- பாஜக கூட்டணியில் தொண்டர் ஒருங்கிணைப்பு இல்லை என்கிறீர்களா?
இப்படி ஒரு கூட்டணியே இல்லை என்கிறேன். அதிமுக தொண்டர்கள் இறங்கி வேலை செய்யும் இடங்களில் பாஜக கொடி பெரும்பாலும் இல்லை. இன்னிக்கு உள்ள எதார்த்தத்தில் களத்தில் இருப்பது அதிமுகதான். இந்த கூட்டணியை நான் ஆரம்பத்தில் சந்தேகப் பிராணி கூட்டணி எனச் சொல்லி வந்தேன். இப்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தும் கூட்டணி ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் உள்ளது. திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பெறத் தேவையான கட்டமைப்பு உள்ள பெரிய கட்சி அதிமுகதான். ஆனால் புதிய காரணியாக தவெக உள்ளே இறங்கியபின் நிலைமை மாறி இருக்கிறது. ஊருக்கு ஊர் விஜய் வரும்போது இருக்கும் கூட்டத்தைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால் விஜயே வரவேண்டாம்; வேட்பாளரை விஜய் ஆக நினையுங்கள் என அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள். பல தொகுதிகளில் ஒரு பைசா கூட செலவழிக்காமல் கார்களும் பைக்குகளும் இளம்பெண்களுமாக இறங்கி தவெகவுக்கு ஓட்டுக் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் விஜய் அலைதான் வீசுகிறது. இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்குகள்தான் திமுகவின் பாரம்பரிய கோட்டை. அதிலும் தவெகவால் ஓட்டை விழுந்துவிட்டதாகக் கருதுகிறேன். இந்த பாரம்பரிய வாக்குகள் போய்விட்டால் அதிமுகவின் சொந்த செல்வாக்கில் அதன் கைதான் ஓங்கக் கூடும். ஆனால் அதிமுகவின் வாக்குகளையும் தவெக அரித்துவிட்டதாகக் கருதுகிறேன். இதற்கெல்லாம் பல ஆதாரங்களைச் சொல்லமுடியும். தற்குறி, அணில் என்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கும் வாக்கு உண்டு. அது செல்லக் கூடிய வாக்குதான் என்பதை மறக்காமல் பேசுங்கள்.
இதனால் என்னதான் விளைவுகள் ஏற்படக்கூடும் என நினைக்கிறீர்கள்?
திமுக, அதிமுக இரு கட்சிகளுமே பணபலத்தை நம்பி நிற்கிறார்கள். ஆனால் பணமே வாங்காமல் சொந்த செலவில் ஒரு கட்சிக்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போகிறார்கள்; வெளிநாட்டில் இருக்கிறவர்கள் பணம் அனுப்புகிறார்கள். அவர்களும் வந்து வாக்களிக்க டிக்கெட் போட்டுள்ளனர். நான் முன்பே சொன்னதுபோல் திமுகவுக்கு எதிரான பொதுவாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் அதிமுகவுக்கு வந்து சேரவேண்டும். ஆனால் அதெல்லாம் தவெகவுக்குப் போகிறது. அதிமுக வாக்குகள் பாஜக நிற்கும் இடங்களில் தவெகவுக்குப் போகும் வாய்ப்புண்டு. இப்படித்தான் ட்ரெண்ட் குண்டக்க மண்டக்க இருப்பதால் எல்லா ஆச்சர்யத்துக்கும் தயாராக இருக்கவேண்டியதுதான்.
திமுக செய்திருக்கும் நலத்திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றுக்கு பலன் இருக்கும் என்றுதானே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?
முன்பெல்லாம் மக்கள் இப்படிப் பேசமாட்டார்கள். இப்போது இதெல்லாம் எங்கள் வரிப்பணம் தானே என்று பேசுகிறார்கள். பெண்களும் பொதுமக்களும் அரசியலை தங்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். இரண்டு பெரிய கட்சிகளையும் சமமாகப் பார்க்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி?
நாதக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தவெகவிடம் இழந்துவிட்டது. அதை ஈடுகட்டும் விதமாக புதிய வாக்காளர்களை அக்கட்சி ஈர்க்கும் எனக் கருதுகிறேன்.